அமைச்சர்பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்

Published Date: July 7, 2025

CATEGORY: GENERAL

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியதாவது:

தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் ஐசிடி அகாடமி 2009 -ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் கடந்து 16 வருடங்களில் இந்தியா முழுவதும் 10 மண்டல அலுவலகங்கள் 1766 உயர்கல்வி  நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பல லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கியுள்ளது.

அதைப்போல, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான உறவுகளை வலுப்படுத்தி மேம்பட்டதிறனுடைய இளைஞர்களை உருவாக்கும் வகையில் இதுவரை 64 பிரிட்ஜ் மாநாடுகளை ஐசிடி அகாடமி வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. இதில் 63 மாநாடுகளை நமது நாட்டுக்குள் மட்டும் நடத்தி இருக்கும் இந்நிறுவனம் 64வது மாநாட்டை இந்திய எல்லை தாண்டி முதல் முறையாக மலேசியாவில் கோலாலம்பூரில் நடத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து நடப்பாண்டில் மேலும் இரண்டு அல்லது மூன்று மாநாடுகளை உலகின் பிற நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.

உலகளவில் மாறிவரும் தொழில்நுட்ப சூழ்நிலையில் மனித வளத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஐசிடி அகாடமியில் இத்தகைய சர்வதேச அளவில் ஆன மாநாடுகள் தமிழகத்தின் திறமையான மனித வளத்தை உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல உதவும். அந்த வகையில் அரசால் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து ஐசிடி அகாடமி தனது சிறப்பான பங்களிப்பை நிரூபித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Media: Hindu Tamil